பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி டிராக்டரை கழுவிவிட்டு குளித்தபோது பரிதாபம்
பண்ருட்டி அருகே ஆயுத பூஜைக்காக டிராக்டரை கழுவிவிட்டு ஏரியில் குளித்த புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாா்.
பண்ருட்டி,
ஆயுத பூஜை கொண்டாட...
பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கிருஷ்ணகுமார் (வயது 22). இவருக்கும் திரிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திரிஷா தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். டிரைவரான கிருஷ்ணகுமார் அதேஊரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று அவர், ஆயுத பூஜையை கொண்டாடுவதற்காக தான் ஓட்டி வரும் டிராக்டரை கழுவுவதற்காக அதேஊரில் உள்ள ஏரிக்கு சென்றார். பின்னர் அவர் டிராக்டரை கழுவி சுத்தம் செய்து விட்டு, குளிப்பதற்காக ஏரிக்குள் இறங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
சோகம்
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேர்பெரியான் குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே மேற்கண்ட சம்பவம் பற்றி தகவல் அறிந்த திரிஷா மற்றும் அவருயைட குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து கிருஷ்ணகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 9 மாதங்களில் புதுமாப்பிள்ளை ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.