அதியமான்கோட்டையில் ரூ.12 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம்-காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தர்மபுரி:
அதியமான்கோட்டையில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ரெயில்வே மேம்பாலம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான்கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு ரூ.12 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் கலெக்டர் சாந்தி, டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர். பின்னர் பஸ் பயணிகள், இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு கலெக்டர் சாந்தி இனிப்பு வழங்கினார்.
பயனடைவார்கள்
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம் சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜதுரை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன், தாசில்தார் ஆறுமுகம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்லமுத்து, வைகுந்தம், ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், பா.ம.க. நிர்வாகி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.