ரூ.7¼ கோடியில் புதிய மேம்பாலம்
ரூ.7¼ கோடியில் புதிய மேம்பாலம்
முத்தூர்,
நத்தக்காடையூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 31 லட்சத்தில் புதிய மேம்பாலம் கட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்.
நொய்யல் ஆறு
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே மருதுறை கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து ஈரோடு மாவட்டம், சென்னிமலை, கே.ஜி.வலசு, வெள்ளோடு, அரச்சலூர்,அவல் பூந்துறை, சிவகிரி மொடக்குறிச்சி உட்பட பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டு பழமையான தாழ்வான தரைப்பாலம் இருந்து வருகிறது.
மேலும் மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மழை நீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மேலே சீறிப்பாய்ந்து செல்லும்.
புதிய உயர்மட்ட மேம்பாலம்
அப்போது இந்த நொய்யல் ஆற்றின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். மேலும் இந்த தாழ்வான தரைப்பாலம் போதிய அகலம் ஏதும் இன்றி இருப்பதால் இவ்வழியே செல்லும் கனரக, வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது ஒதுங்க வழியின்றி விபத்து அபாயத்துடன் சென்று வந்தன.
எனவே இந்த நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய உயர்மட்ட மேம்பாலமாக மாற்றி கட்ட வேண்டும் என்று இப்பகுதி கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த வந்தனர்.
அடிக்கல் நாட்டு விழா
இதனை தொடர்ந்து தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.7 கோடியே 31 லட்சத்தில் இந்த மருதுறை நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து மருதுறை நொய்யல் ஆற்று தரைப்பாலத்தில் இதற்கான அடிகள் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது.விழாவிற்கு மருதுறை ஊராட்சி தலைவர் செல்விசிவக்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ், கவுன்சிலர்கள் ரேணுகா ஜெகதீசன் (மருதுறை), ரவி (பரஞ்சேர்வழி), நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் என்.செந்தில்குமார், மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர்
சோமசுந்தர முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
---
புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.