ஒட்டன்சத்திரம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.12½ கோடியில் கட்டிடம் கட்ட பூமிபூஜை; அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்
ஒட்டன்சத்திரம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.12½ கோடியில் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கல்லூரிக்கு கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து கல்லூரி கட்ட இடம் தேர்வு நடைபெற்றது. அப்போது கள்ளிமந்தயத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 46 லட்சத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முத்துராமலிங்கம் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பூமிபூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "தமிழகத்தில் மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது போல் ஒட்டன்சத்திரத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் அருகே காலாஞ்சிபட்டியில் ரூ.2½ கோடியில் போட்டித்தேர்வு பயிற்சி மையத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது" என்றார்.
இந்த விழாவில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர் பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, தாகிரா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் விஜயராணி நன்றி கூறினார்.