செங்கல்பட்டு உள்பட 8 இடங்களில் வருவாய்த்துறைக்கு ரூ.19¾ கோடியில் புதிய கட்டிடங்கள்
செங்கல்பட்டு உள்பட 8 இடங்களில் ரூ.19¾ கோடியில் கட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.
சென்னை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரூ.54 லட்சத்து 95 ஆயிரம் செலவில் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ரூ.3 கோடியே 82 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டிலும், சாத்தான்குளத்தில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும், திருச்சியில் ரூ.2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரம் செலவிலும் தாசில்தார் அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
மொத்தம் ரூ.19 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை கலெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக இணை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.