புதிய பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும்


புதிய பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும்
x

லெட்சுமாங்குடியில், வடபாதிமங்கலம் பகுதியில் புதிய பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர், மே

லெட்சுமாங்குடியில், வடபாதிமங்கலம் பகுதியில் புதிய பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி என 4 வழி சாலைகள் உள்ளது. இதில், வடபாதிமங்கலம் செல்லும் சாலையோரத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.இந்த பயணிகள் நிழலகத்தை கூத்தாநல்லூர், பாய்க்காரத்தெரு, பண்டுதக்குடி, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், சேந்தங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம் செல்வோர், வேலைக்கு சென்று வருவோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இடவசதி இல்லை

கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது. இருக்கைகள் அமருவதற்கு ஏற்றதாக இல்லை. மழைக்காலங்களில் நிழலகம் உள்பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், பயணிகள் வசதியாக பயன்படுத்த போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த பயணிகள் நிழலகம் கடைவீதி சாலையோரத்தில் உள்ளதால் ஏராளமான பயணிகள் பயன்படுத்த ஏற்றதாக இல்லை.

புதிய நிழலகம்

இதனால், பயணிகள் சாலையிலேயே பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்கள், பல்வேறு சிரமங்களை அடைகிறார்கள். எனவே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமாக நவீன இருக்கை வசதிகளுடன் புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story