கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு புதிய தேர்
கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு புதிய ேதர் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகள் கூறினார்.
திருப்பனந்தாள்,
கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு புதிய ேதர் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகள் கூறினார்.
சுக்கிரன் கோவில்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள கஞ்சனூரில் பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. சுக்கிரன் தலமாக போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.இக்கோவிலில் மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கஞ்சனூருக்கு வந்த மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பணிகள்
தொடர்ந்து கோவிலில் சாமி, அம்பாள், சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் மதுரை ஆதீனம் சார்பில் ரூ.60 லட்சத்தில் நடைபெறும் திருப்பணிகளை மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவில் சுற்றுப்புறத்தில் 700 மீட்டர் நீளமுடைய மதில் சுவர் திருப்பணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் கோவிலில் சாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. திருப்பணியில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், உபயதாரர்கள் நேரடியாக கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு திருப்பணியில் பங்கேற்கலாம்.
புதிய தேர்
கோவிலில் திருப்பணிகளுடன் பக்தர்களின் வசதிக்காக சுகாதார வளாகம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது.மாசி மக உற்சவத்தில் தேர் ஓட வசதியாக கஞ்சனூர் கோவிலுக்கு புதிதாக தேர் செய்யும் வகையில் விரைவில் திருப்பணி தொடங்கப்பட உள்ளது. திருப்புறம்பியும் சாட்சிநாதர் கோவிலில் இலுப்ப மரத்தால் ஆன சுமார் 9 அடி அகலம், 11 அடி உயரம் உள்ள தேர் வடிவமைக்கும் பணி ரூ.40 லட்சம் மதிப்பில் ஆதீனம் சொந்த நிதியில் மும்முரமாக நடந்து வருகிறது. . வருகிற மாசி மக விழாவில் தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.கஞ்சனூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் சித்த மருத்துவ வைத்தியசாலை மதுரை ஆதீனத்தின் சார்பில் தொடங்கிடவும், சுக்ர பகவானுக்கு வெள்ளி தேர் ஒன்றும் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து திருப்புறம்பியும் சாட்சிநாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருப்பணிகளையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டார். அப்போது அவருடன் நிர்வாக பொறுப்பாளர் ஆசிரியர் முத்தையன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் இருந்தனர்.