சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதியாக இருந்த எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்தது.
இதனை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
பதவியேற்பு
இதையடுத்து பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று காலை நடந்தது. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.வி.கங்கா பூர்வாலாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து எஸ்.வி.கங்கா பூர்வாலா தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதிக்கு கவர்னர், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்களை நினைவுப்பரிசாக வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.கே.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இணை தலைவர் மோகனகிருஷ்ணன், தமிழக அரசின் தலைமை வக்கீல், அரசு வக்கீல்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வக்கீல்கள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பென்ஜமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்ற தலைமை நீதிபதி
சென்னை ஐகோர்ட்டின் 33-வது தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவியேற்று கொண்டதும், விழா மேடையில் இருந்து இறங்கி விருந்தினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது தாயார் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அவரது தாயார் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலாவை கட்டி அணைத்தபடி ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.