குளித்தலை அரசு கலைக்கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்
குளித்தலை அரசு கலைக்கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.5 கோடியே 5 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் 3 ஆய்வகம் கொண்ட புதிய கட்டிடமும், ஏற்கனவே உள்ள பழைய கட்டிடத்தில் புதிதாக 8 வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டிடத்தை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை அவர் பார்வையிட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.