நெல்லையில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம்-சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தகவல்
நெல்லையில் அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
நெல்லையில் அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
2-வது நாளாக ஆய்வு பணிகள்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில், குழு உறுப்பினர்கள் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று 2-வது நாளாக நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.
நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையின் கீழ் புதிதாக பாலம் கட்டும் பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், கழிவறை வசதிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய கலெக்டர் அலுவலகம்
நெல்லை அருகே பச்சையாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள பழைய தமிழாக்குறிச்சி அணைக்கட்டு ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும். நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.92 கோடியில் 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.104 கோடியில் 2 லட்சம் சதுர அடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியே செயல்பட்டு வரும் துறைகள் அனைத்தையும் பொதுமக்கள் நலன் கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் ரூ.8 கோடியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) வாசுதேவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜ், பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், மாநகராட்சி நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, கவுன்சிலர்கள், மாநகராட்சி பொறியாளர் குமரகேசன், செயற்பொறியாளர் வாசுதேவன், நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், கல்லணை பள்ளி தலைமை ஆசிரியர் கனியம்மாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.