'நான் முதல்வன்' திட்டத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விரைவில் புதிய பாடத்திட்டம்


நான் முதல்வன் திட்டத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விரைவில் புதிய பாடத்திட்டம்
x

‘நான் முதல்வன்' திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் விரைவில் புதிய பயிற்சி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மாநாட்டில் முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, தொழில் நுட்ப கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலை தருபவர்களாக மாற்ற வேண்டும்

மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள 'நான் முதல்வன்' திட்டத்தை அடித்தளத்தில் நிறைவேற்றும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களாகிய உங்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கிறது. தற்போது ஆன்-லைனில் கல்வி பயிலும் காலமாக உள்ளது. அதற்கு ஏற்ப பாடத்திட்டங்களும் மாற வேண்டும். மாணவர்களை வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை தருபவர்களாக மாற்ற வேண்டும்.

மருத்துவம் படித்தவர்கள் கிளினிக்குகள் வைத்து பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது போல், என்ஜினீயரிங் படித்தவர்கள் தங்கள் பகுதிகளில் சிறு சிறு தொழில்களை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒரு காலத்தில் என்ஜினீயரிங் படிப்பு எட்டாக்கனியாக இருந்தது. 2006-2007 கல்வியாண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்த பிறகு கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் என்ஜினீயரிங் படித்தார்கள்.

கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும்...

ஆனால் தற்போது, பி.ஏ., பி.எஸ்சி.க்கு கூட நழைவுத்தேர்வு என்கிறார்கள். அதைவிட, 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது தேவையில்லை என்ற உணர்வோடு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்று புதிய கல்வி கொள்கையை உருவாக்கினார். அதில் ஒரு திட்டம் தான் 'நான் முதல்வன்' திட்டம்.

'நான் முதல்வன்' திட்டத்தில் ஆன்லைன் மற்றும் நேரடியாக பாடத்திட்டங்கள் சொல்லித்தரப்படுகிறது. அதற்காக வழங்கப்படும் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புக்கு உதவியாக இருக்கும். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தில் புதிய பயிற்சி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது போல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் விரைவில் புதிய பயிற்சி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story