புதிய கல்விக்கொள்கை ஏழை மக்களுக்கு ஆபத்தானது-சபாநாயகர் அப்பாவு பேட்டி
புதிய கல்விக்கொள்கை ஏழை மக்களுக்கு ஆபத்தானது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
வள்ளியூர்:
"புதிய கல்விக்கொள்கை ஏழை மக்களுக்கு ஆபத்தானது" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சாதனை நிகழ்ச்சி
டி.வி., செல்போன் போன்றவற்றில் மூழ்கி கிடக்கும் மாணவ- மாணவிகளை, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையான சிலம்பத்தை கற்க ஊக்குவிக்கும் விதமாகவும், சிலம்பம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தனியார் அகாடமி சார்பில் மாணவர்கள் ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி பழவூரில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி, சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 115 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு 1 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர். பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, ஊர் நலக்கமிட்டி தலைவர் இசக்கியப்பன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டித்துரை, அலெக்ஸ்பால் கோசிசின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய கல்விக்கொள்கை
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக்கொள்கையானது சாமானிய ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்கின்றவர்களின் சராசரி 52 சதவீதம் ஆகும். ஆனால் இந்திய அளவில் 34 சதவீதம் பேர்தான் பட்டப்படிப்பு படிக்கின்றனர்.
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால், உயர்படிப்பு படிக்கின்றவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். புதிய கல்விக்கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் சாதகமாக இருக்கும். இது ஏழை மக்களுக்கு ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.