எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்டும் பணி எப்போது தொடங்கப்படும்?விவசாயிகள் எதிர்பார்ப்பு


எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்டும் பணி எப்போது தொடங்கப்படும்?விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்டும் பணி எப்போது தொடங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் கிராமத்திற்கும், ஏனாதிமங்கலம் கிராமத்திற்கும் இடையே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950-ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்த எல்லீஸ் அணைக்கட்டானது 72 ஆண்டுகள் பழமைவாய்ந்த அணைக்கட்டாகும். வினாடிக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் வகையில் இந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டது.

இதன் நீர்பிடிப்பு பகுதி 12,481 சதுர கி.மீ. ஆகும். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாகவும், 30-க்கும் மேற்பட்ட ஏரிகளின் மூலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள்குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்தபுத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும், அதுபோல் இடதுபுறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரிப்பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம்பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது.

இந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து விழுப்புரம் நகருக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு ஒரு சிறிய சுற்றுலாத்தலமாகவும் விளங்கியது.

உடைந்து சேதம்

இந்நிலையில் இந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழையின்போது தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அணைக்கட்டில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி அதன் வழியாகவும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, அதன் பலத்தை இழந்து எந்தநேரத்திலும் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டது.

மேலும் ஆற்றில் ஓடிய தண்ணீர், அணைக்கட்டின் மையப்பகுதி வழியாக தடையின்றி ஓடும் வகையில் அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெடிவைத்து தகர்த்தனர். அதன்பிறகு உடைந்த இந்த அணைக்கட்டை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வீணாக கடலில் கலந்த தண்ணீர்

இதன் காரணமாக கடந்த வடகிழக்கு பருவமழையின்போது அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கனமழையினாலும் மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீராலும் எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள 4 மதகுகளும் உடைந்ததால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உடைந்த மதகுகள் வழியாக தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியேறி கடலில் கலந்தது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயராமலும், ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்லாத நிலையும் ஏற்பட்டதால் ஒரு சொட்டு தண்ணீரைகூட அணைக்கட்டில் தேக்கி வைக்க முடியவில்லையே என்று விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர்.

1½ ஆண்டுகளாச்சு

எனவே இந்த அணைக்கட்டை விரைந்து சீரமைத்து தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்க அமைப்புகளும் பலமுறை கோரிக்கை விடுத்ததோடு பல்வேறுகட்ட போராட்டங்களையும் நடத்தினர்.

அணைக்கட்டு உடைந்து 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் உடைந்த அணைக்கட்டை சீரமைக்கவோ, புதியதாக அணைக்கட்டு கட்டவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இதனிடையே தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்ட அரசால் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கான ஆயத்த பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே புதிய அணைக்கட்டு கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய அணைக்கட்டு எப்போது கட்டப்படும்?


Next Story