வனத்துறைக்கு ரூ.15 லட்சத்தில் புதிய தீயணைப்பு உபகரணங்கள்-வாகனம்


வனத்துறைக்கு ரூ.15 லட்சத்தில் புதிய தீயணைப்பு உபகரணங்கள்-வாகனம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட வனத்துறைக்கு ரூ.15 லட்சம் செலவில் புதிய தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை மாவட்ட வன அதிகாரி இளையராஜா வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட வனத்துறைக்கு ரூ.15 லட்சம் செலவில் புதிய தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை மாவட்ட வன அதிகாரி இளையராஜா வழங்கினார்.

ரூ.15 லட்சத்தில்

குமரி மாவட்டத்தில் களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டியபுரம் மற்றும் பூதப்பாண்டி என 5 வன சரகங்கள் உள்ளன. இந்த வன சரகங்களுக்குட்பட்ட காடுகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

தீயை அணைக்கும் விதமாக தீயணைப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்காக முதல்கட்டமாக அரசு ரூ.15 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து குமரி மாவட்ட வனத்துறையிடம் வழங்கியது. அதனைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க வசதியாக தீயணைப்பு உபகரணங்கள் ரூ.6½ லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

வாகனம்- உபகரணங்கள்

அதாவது தீ கவச உடை, புகை தடுப்பு கண்ணாடி, முக கவசம், செடிகளை வெட்ட வசதியாக கருவிகள், கொசு வலைகள், தீத்தடுப்பு காலணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு உபகரணங்களை குமரி மாவட்டத்துக்கு உட்பட்ட 5 வனச்சரக ஊழியர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட வன அதிகாரி இளையராஜா 5 வனசரக ஊழியர்களிடம் தீயணைப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினார். மேலும் தீயணைப்பு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக ரூ.8½ லட்சம் செலவில் வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.


Next Story