இலங்கையில் இருந்து திருச்சிக்கு புதிய விமான சேவை
இலங்கையில் இருந்து திருச்சிக்கு புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது.
செம்பட்டு,ஜூலை.7-
திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு வருவது வாடிக்கை. இந்த பயணிகளுக்காக இலங்கையில் இருந்து திருச்சிக்கு கடந்த ஓராண்டாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சார்பில் காலை மற்றும் மதியம் நேர சேவை இயக்கப்பட்டு வந்தது. தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மதிய நேரத்தில் இயக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, காலை நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு மற்றொரு விமான நிறுவனமான பிக்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமான சேவையானது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கை நோக்கி புறப்படும் என தெரிகிறது. இதன் நேர பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், விரைவில் முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.