புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் திருமணமான ஓராண்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருமணமான ஓராண்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுமண தம்பதி

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவைச் சேர்ந்தவர் டெலிங்கர் மகன் பிரசாத் (வயது 32). இவர் குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்த கில்பர்ட் மகள் அனிஷாவுக்கும் (25) கடந்த 20-1-2022 அன்று திருமணம் நடந்தது. பின்னர் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, குவைத்துக்கு சென்றார்.

பெற்றோரை பார்க்க அனுமதிக்க மறுப்பு

இதற்கிடையே, அனிஷாவின் பெற்றோர் தங்களது மகளை வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரசாத்தின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்லும்போது மட்டும் மகளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாத் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அவரும், அனிஷாவை அவரது பெற்றோரை பார்ப்பதற்காக அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் மாலையில் பிரசாத்தின் உறவினர் ஒருவர், அனிஷாவின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உங்களது மகள் தூக்குப்போட்டு கொண்டதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

இதனால் பதறியடித்தவாறு அனிஷாவின் பெற்றோர் தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள், அனிஷா இறந்ததால் அவரது உடலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி அழுதனர்.

உறவினர்கள் போராட்டம்

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் புதுப்பெண் தற்கொலை செய்ததால், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனிஷாவின் உறவினர்கள் நேற்று காலையில் திரண்டு வந்தனர். அவர்கள், அனிஷா தற்கொலை செய்யவில்லை, அவரை கொலை செய்துள்ளனர் என்றும், அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையனில் அவரது உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அவர்களிடம், உதவி கலெக்டர் கவுரவ்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இதனை ஏற்காமல் அனிஷாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் திருமணமான ஓராண்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story