தூத்துக்குடி அருகே ரூ.68 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்


தூத்துக்குடி அருகே ரூ.68 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே ரூ.68 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட ரூ.68 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளை கனிமொழி எம்.பி நேற்று திறந்து வைத்தார்.

ரூ.68 லட்சம்

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்டபெரியநாயகிபுரத்தில், ரூ.10 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. வடக்கு காலங்கரையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதே பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகரில், ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையும், மாப்பிள்ளையூரணியில் ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையமும், மாப்பிள்ளையூரணி சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடையும் ஆக மொத்தம் ரூ.68 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

இதே போன்று தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பஞ்சாயத்து சோரீஸ்புரத்தில் ரூ.13 லட்சம் செலவில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடமும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து வடக்கு சோட்டையன்தோப்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடமும், பூப்பாண்டியாபுரத்தில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடையும் கட்டப்பட உள்ளது.

திறப்பு விழா

இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளை தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதி, குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ஜான்சன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன்பொன்மணி, வசந்தா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story