சமத்துவபுரத்தில் புதிய வீடுகள் கட்டும் பணி
மன்னார்குடி அருகே சமத்துவபுரத்தில் புதிய வீடுகள் கட்டும் பணியை சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே சமத்துவபுரத்தில் புதிய வீடுகள் கட்டும் பணியை சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
வீடு கட்டும் பணி
மன்னார்குடி அருகே சித்தேரி மரவாக்காடு ஊராட்சி சமத்துவபுரத்தில் புதிதாக வீடு கட்டும் பணியினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின் போது இணை இயக்குனர் சந்திரா, மன்னார்குடி ஒன்றிய குழுதலைவர் மனோகரன், செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஜல் ஜீவன் திட்ட பணிகள்
இதைப்போல மன்னார்குடி ஒன்றியம் இடையர் எம்பேத்தி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக போடப்படும் குடிநீர் குழாய் பணியினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, இணை இயக்குனர் சந்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மனோஜ் நாகராஜ் உடனிருந்தார்.மேலும் மன்னார்குடி பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.33.04 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், ரூ.5.65 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளதையும், ரூ1.77 லட்சம் மதிப்பில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி, வக்ராநல்லூர் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும், மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் பதிவு செய்யும் செயலி உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.
இல்லம் தோறும் குடிநீர்
தொடர்ந்து, சேரன்குளம் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளையும், ஆய்வு செய்தார்.
பின்னர் சுந்தரக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ.11.65 லட்சம் மதிப்பில் அங்கான்வாடி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருவதையும், ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டுள்ளதையும், ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளேவர் பிளாக் சாலையினையும், சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புனரமைக்கப்பட்டு வரும் கழிவறை பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.