சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க தூய்மை பணியாளர்கள் புதிய முயற்சி


சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க தூய்மை பணியாளர்கள் புதிய முயற்சி
x
தினத்தந்தி 29 Jun 2023 1:29 AM IST (Updated: 29 Jun 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

பொன்மலை ஜி-கார்னர் பகுதியில்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க தூய்மை பணியாளர்கள் புதிய முயற்சியாக மரக்கன்று நட்டு வருகின்றனர்.

திருச்சி

பொன்மலை ஜி-கார்னர் பகுதியில்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க தூய்மை பணியாளர்கள் புதிய முயற்சியாக மரக்கன்று நட்டு வருகின்றனர்.

வேலைப்பளு

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீதிகளில் தூக்கி எறியப்படும் குப்பைகளால் தூய்மைப்பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்க சென்றாலும், பொதுமக்கள் சிலர் தெருக்களில் குப்பைகளை தூக்கி எறிந்து விடுகிறார்கள். குறிப்பாக சாலையோரம் குப்பையில் கிடக்கும் உணவு பொருட்களை தின்பதற்காக தெருநாய்கள் சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே பாயும் போது விபத்தும் ஏற்படுகிறது.

அத்துடன் தெரு நாய்கள் அவற்றை குதறி வீதி எங்கும் இழுத்துச்செல்கிறது. முடிவில் அந்த குப்பைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்களே தங்கள் கைகளால் அள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் அவர்களின் வேலை நேரமும், வேலைப்பளுவும் அதிகரித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதே நிலைதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளிலும் உள்ளது.

மரக்கன்று நட்டனர்

இதுபோல் திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் அணுகு சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் தூக்கி எறியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசியதுடன், வாகன ஓட்டிகளுக்கும் இடைஞ்சலாக இருந்தது.இந்தநிலையில் அந்த இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள், அங்கு யாரும் குப்பைகளை கொட்டாமல் இருக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அந்த இடத்தை சுத்தப்படுத்திய அவர்கள், அங்கு மரக்கன்று நட்டு, வேலி அமைத்துள்ளனர். மேலும், தங்கள் கைகளாலே ' ஒரு வாளி குப்பை கொட்டுவதற்கு பதிலாக ஒரு வாளி தண்ணீர் ஊற்றலாமே' என்ற வாசகத்தை எழுதி பதாகைகளை வைத்துள்ளனர். தூய்மை பணியாளர்களின் இந்த புதிய முயற்சியை அந்தபகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.


Next Story