வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புதிதாக புலனாய்வு பிரிவு தொடக்கம்


வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புதிதாக புலனாய்வு பிரிவு தொடக்கம்
x

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட புலனாய்வு பிரிவை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட புலனாய்வு பிரிவை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார்.

புலனாய்வு பிரிவு தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனி புலனாய்வு பிரிவு தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஒரு போலீஸ் நிலையத்தில் முன்னோட்டமாக தனி புலனாய்வு பிரிவை தொடங்கும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் இந்த புலனாய்வு பிரிவு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி போலீஸ் நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் புதிதாக புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் புலனாய்வு பிரிவு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புலனாய்வு பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், அந்த பிரிவு பார்வையிட்டார். மேலும் அதில் பணிபுரியும் போலீசாரிடம் வழக்குகளை விசாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களை...

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறுகையில், வேலூர் சரகத்தில் முன்னோட்டமாக தெற்கு போலீஸ் நிலையத்தில் புலனாய்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12 போலீசார் பணிபுரிவார்கள். இவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் கொடுஞ் குற்றச்செயல்கள் நடந்தால் அதனை விசாரிப்பார்கள். அந்த செயல்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து அவர்களை விரைந்து கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுப்பார்கள். இந்த பிரிவில் உள்ள போலீசார் பிற பணிகளான ரோந்து பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இவர்கள் குற்ற வழக்குகளின் விசாரணை மற்றும் அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள். வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் இந்த பிரிவினர் இயங்குவார்கள். இந்த பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டால் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் உட்கோட்டம் வாரியாக போலீஸ் நிலையத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.


Next Story