கைதிகளை கண்காணிக்க புதிய நடவடிக்கை: சேலம் ஜெயிலில் போலீசாருக்கு சட்டையில் கேமரா-டி.ஐ.ஜி. தமிழ்செல்வன் வழங்கினார்


கைதிகளை கண்காணிக்க புதிய நடவடிக்கை: சேலம் ஜெயிலில் போலீசாருக்கு சட்டையில் கேமரா-டி.ஐ.ஜி. தமிழ்செல்வன் வழங்கினார்
x

சேலம் மத்திய சிறையில் கைதிகளை கண்காணிக்க புதிய நடவடிக்கையாக போலீசாருக்கு சட்டையில் கேமராவை டி.ஐ.ஜி. தமிழ்செல்வன் வழங்கினார்.

சேலம்

புகையிலை பொருட்கள்

சேலம் மத்திய சிறை உள்பட அனைத்து சிறைகளிலும் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், செல்போன், பீடி, சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது கைதிகளிடம் சோதனை நடத்தி சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் அதன் புழக்கத்தை கட்டுப்படுத்தமுடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் கைதிகளை கண்காணிக்கவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் சப்ளை செய்வதை கண்டுபிடிக்கும் வகையிலும் முதல்கட்டமாக தமிழகத்தில் 9 மத்திய சிறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் கைதிகள், உறவினர்களின் உடைமைகளை சோதனை செய்யும் போலீசார், சிறைக்குள் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் சட்டையில் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 9 மத்திய சிறைகளுக்கும் தலா 5 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன..

சட்டையில் கேமரா

அதன்படி, சென்னை புழல் சிறையை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் உள்ள ரோந்து போலீசாருக்கு அவர்களின் சட்டையில் கேமராவை பொருத்தி அதன் செயல்பாட்டை கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உடனிருந்தார். இதனை தொடர்ந்து சிறையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்கள் சட்டையில் கேமராக்களை பொருத்தி பணியில் ஈடுபட்டனர்.

சிறையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் சிறையின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க முடியும். கேமராவில் பதிவாகும் அனைத்து நிகழ்வுகளும் நேரலையாக, சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் காணலாம். இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத பகுதிகளையும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறை போலீசாரால் நீக்க முடியாது. இதன்மூலம் சிறையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, தடை செய்யப்பட்ட பொருட்களின் நடமாட்டம், கைதிகளுக்கு போலீசார் யாரேனும் உதவுகிறார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story