6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள்


6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று ஊட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று ஊட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். தொடர்ந்து அங்கு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதில் உமரி காட்டேஜ், கட்டபெட்டு என 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நீலகிரிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 600 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள் வருகிற ஜூலை மாதம் நிறைவடையும். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது விளையாட்டுத்துறை அமைச்சர் மருத்துவமனையை திறந்து வைப்பார்கள்.

தட்டுப்பாடு இல்லை

எமரால்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுச்சுவர் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.30 கோடியில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லை. மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104-க்கு புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி மற்றும் வெறிநாய்க்கடி மருந்து இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வீரியம் மற்றும் பாதிப்பு குறைவு. டெல்டா வைரஸ் போன்று இது இல்லை. அதனால் மருத்துவர் அறிவுறுத்தலுடன் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம்.

புதிய மருத்துவக்கல்லூரிகள்

சுற்றுலா தலங்களில் கூட்டம் இருக்கும். அங்கு முககவசம் அணிவது நல்லது. தற்போது வரை மருத்துவமனைகளில் மட்டும் தான் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், தென்காசி, ராணிபேட்டை உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்கிறோம். நீட் மசோதா மத்திய அரசின் பரிந்துரையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இத்தலார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு மற்றும் ஹேபிவேலியில் புதிய சுகாதார நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவ கல்வி இயக்குனர் ஆர்.சாந்தி மலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், இணை இயக்குனர் சிவகுமார், துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story