புதியசந்திரயான் விரைவில் விண்ணில்செலுத்தப்பட உள்ளது: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்


புதியசந்திரயான் விரைவில்  விண்ணில்செலுத்தப்பட உள்ளது: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
x

புதிய சந்திரயான் விரைவில் விண்ணில்செலுத்தப்பட உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

"புதிய சந்திரயான் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்" என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரயான்

சந்திரயான்-2 திட்டத்தின் முடிவுகளின்படி, அதில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டன. அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதன் புதிய வடிவம் உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. சோதனைகள் முடிந்த பிறகு, விரைவில் புதிய சந்திரயான் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுவது சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளம் ஆகும். இஸ்ரோ சிறிய ெசயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான புதிய ராக்கெட்டை தயாரித்து வருகிறது.

இந்த சிறிய அளவு ராக்கெட்டுக்களை விண்ணில் செலுத்துவதற்கு மிகவும் உகந்த இடமாக குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏவுதளம் அமைக்க 2 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்த நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

திட்ட அறிக்கை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரின் சீரிய முயற்சி காரணமாக இதுவரை 80 சதவீதம் நிலம் பெறப்பட்டு உள்ளது. முழு நிலமும் கிடைத்த உடன் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

முழு நிலமும் கிடைத்த பிறகு, கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் என்ஜினீயர்கள் உரிய மண் பரிசோதனை செய்து, ராக்கெட் ஏவுதளம் அமைய வேண்டிய இடத்தை முடிவு செய்வார்கள். அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிகரமாக செயல்படுகிறது

முன்னதாக தூத்துக்குடியில் நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவன், மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுைகயில், "சந்திரயான்-2 திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர் ஆகிய 2 நிலைகள் இருந்தன. இதில் ஆர்பிட்டர் இன்றும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. லேண்டரை தரையிறக்கும் போது, வினாடிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கி சென்றது. இதனை என்ஜின்கள் மூலம் கட்டுப்படுத்தி வேகத்தை குறைத்து மெதுவாக தரையிறக்கும் பணி நடந்தது.

150 மீட்டர் தூரத்தில் லேண்டர் வந்த போது, வேகத்தை கட்டுப்படுத்தும் என்ஜின்களின் அழுத்தம் தேவைக்கு அதிகமாக இருந்தது. இதனால் லேண்டர் மேல் நோக்கி தள்ளப்பட்டது. அப்போது கட்டுப்படுத்தும் என்ஜினின் வேகத்தை மீறி தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் லேண்டர் எதிர்பார்த்தபடி தரையிறங்கவில்லை.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே நாம் வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தி உள்ளோம். அங்கு மனிதர்களை அனுப்புவது தொழில்நுட்ப முறையில் சாத்தியமானது. ஆனால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் சென்றடைய ஒரு வருடம் ஆகும். அதுவரை மனிதர்கள் விண்கலத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அங்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வர முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்.

----------


Next Story