தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளை நிறுத்திவைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்


தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளை நிறுத்திவைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நிறுத்திவைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் விதித்துள்ள கட்டுப்பாடுகளினால் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அதாவது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ள மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்ற புதிய விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு (2023-24) முதல் இந்த விதிமுறை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையை அபகரிக்கும் செயல்

இது, மாநில உரிமைகளை அபகரிக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாமல் பொது சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என விரும்பும் மாநிலங்களின் விருப்பத்தை தடுப்பது போன்றதாகும்.

தமிழ்நாடு போன்ற முன்னணி மாநிலங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையை வலுப்படுத்தி வருகின்றன.

போதிய அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் சுகாதாரத்துறையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை உருவெடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திறமையான மருத்துவ நிபுணர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இவர்களால் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் வெற்றிகரமாக சேவை செய்ய முடிகிறது.

பொருத்தமானது அல்ல

இதன் காரணமாக தமிழகத்தை பொறுத்தமட்டில் தரமான மருத்துவ சேவைக்கு பெரும் தேவை உருவாகி உள்ளது. எதிர்காலத்தில் இதை பூர்த்தி செய்வதற்காக புதிய மருத்துவ கல்லூரிகள் முற்றிலும் அவசியம் ஆகும்.

மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை விகிதம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறை பொருத்தமானது அல்ல.

தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநில அளவில் போதிய டாக்டர்கள் இருந்தாலும், மாவட்ட அளவில் போதிய டாக்டர்கள் தேவை என்பது தொடர் பிரச்சினையாக உள்ளது.

பின்தங்கிய பகுதிகளில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறப்பதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கூடுதல் பங்களிப்பு

புதிய அளவுகோல் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதிப்பது என்பது பல மாவட்டங்களில் இன்னும் அதிகளவு டாக்டர்கள் தேவை என்பதை மறுப்பது போன்றதாகி விடும்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை விகிதாசாரத்தை விட அதிகளவு டாக்டர்கள் இருப்பது, மாநில அரசு மற்றும் தனியார் துறையினரின் முதலீடுகளால் தான் என்பதையும், மத்திய அரசின் முதலீடுகளால் அல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

டாக்டர்கள் தேவையை பொறுத்தமட்டில் மத்திய அரசு கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

வாய்ப்பை இழந்து விடும்

இதுபோன்ற சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க கட்டுப்பாடு விதிப்பது எதிர்காலத்தில் மத்திய அரசால் சுகாதாரத்துறையில் தமிழகம் புதிய முதலீடுகளை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிடும்.

கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கான அடிப்படை உரிமைகள் மீது நிர்வாக ரீதியாக கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

இதன்மூலம் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அறிவிப்பு சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது.

நிறுத்திவைக்க வேண்டும்

எனவே, அனைத்து சிக்கல்களையும் கருத்தில் கொண்டு புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளை நிறுத்திவைக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story