போடி நகராட்சியில் குப்பை-காய் இயக்க திட்டம் தொடக்கம்
போடி நகராட்சியில் குப்பை-காய் இயக்க திட்டம் தொடங்கப்பட்டது.
போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குப்பை-காய் இயக்க திட்டம் ெதாடக்க நிகழ்ச்சி, நகராட்சி 23-வது வார்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கி, குப்பை-காய் இயக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் முருகேசன் வரவேற்றார். இதில், 23-வது வார்டு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரி சுரேஷ்குமார் கலந்துகொண்டு, குப்பை-காய் இயக்கம் குறித்து விளக்கி கூறினார். அப்போது அவர், இந்த புதிய இயக்க திட்டத்தின்படி வீடுகளில் சேகரமாகும் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி, காய்கறி விளைவிப்பதை ஊக்குவிப்பதாகும். இந்த திட்டத்தின்படி, காய்கறி விளைவிக்கும் வீடுகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இதன்மூலம் நகராட்சிக்கு வரும் குப்பைகளின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்றார்.
பின்னர் நகராட்சி தலைவர் பேசுகையில், இந்த புதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போடி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பை-காய் இயக்கம் தொடங்கப்படும். எனவே இதில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அதிக அளவு கலந்துகொண்டு, தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக போடியை மாற்ற வேண்டும் என்றார். பின்னர் புதிய திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை கவுன்சிலர்கள் முருகேசன், சங்கர் ஆகியோர் சுயஉதவி குழுவினருக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், தர்மராஜ், அகமது கபீர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சமுதாய அமைப்பாளர் பூமா நன்றி கூறினார்.