பயணிகளின் வசதிக்காக மதுரை ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் கட்டுமான பணிகள் மும்முரம்


பயணிகளின் வசதிக்காக மதுரை ரெயில் நிலையத்தில்   புதிய பிளாட்பாரம் கட்டுமான பணிகள் மும்முரம்
x

பயணிகளின் வசதிக்காக மதுரை ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை


மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ளே நுழைந்தவுடன் 1-வது பிளாட்பாரமும், அதற்கடுத்து 2, 3-வது பிளாட்பாரங்களும், 4,5-வது பிளாட்பாரங்களும், மேற்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ளே நுழைந்தவுடன் 6-வது பிளாட்பாரமும் உள்ளன. ஆனால், இந்த பிளாட்பாரங்களில் 6-வது பிளாட்பாரத்தில் இருந்து மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் மற்றும் மதுரை-தேனி பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திர ரெயில்கள் இயக்கப்படுவதால் பிளாட்பாரத்துக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நீண்ட தூரங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. எனவே, கூடுதல் பிளாட்பாரங்கள் கட்டித்தர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, தற்போது ரெயில் நிலையத்தில் இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியுடன் சேர்த்து பயணிகளின் வசதிக்காக 7-வது பிளாட்பாரம் கட்ட வேண்டும் என்று கோட்ட மேலாளர் அனந்த் வலியுறுத்தியதை தொடர்ந்து, தற்போது அந்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது 5-வது பிளாட்பாரத்திற்கு அடுத்து 7-வது தண்டவாள பாதையில் புதிய பிளாட்பாரம் கட்டப்பட்டு வருகிறது. 6-வது தண்டவாள பாதையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில்கள் இயக்குவதற்காக பிளாட்பாரம் அமைக்கப்படாமல் உள்ளது. புதிய பிளாட்பாரம் 24 ரெயில் பெட்டிகள் நிற்கும் அளவுக்கு 435 மீட்டர் நீளம் கொண்டதாகவும், பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ப 9 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேபோல, 6-வது பிளாட்பாரமும் சென்னை-போடி குளிரூட்டப்பட்ட ரெயில் இயக்கத்திற்கு வசதியாக எல்லீஸ்நகர் போடி லைன் வரை நீளம் அதிகரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து பயணிகளின் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story