ரூ.7½ லட்சம் செலவில் புதிய மின்பாதை
நாமக்கல்லில் ரூ.7½ லட்சம் செலவில் புதிய மின்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நகர் பகுதியில் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. முயற்சியால், மாருதிநகர் மின்பாதை மற்றும் அணியாபுரம் மின்பாதைகளுக்கு இடையே சுமார் ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு மின்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய மின்பாதையை ராமலிங்கம் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த புதிய மின்பாதை அமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் மின்தடை ஏற்பட்டால், ஒருசில நிமிடங்களிலேயே அதனை சரிசெய்து, மின்வினியோகம் கொடுக்க முடியும். இதன் மூலம் 3,500 மின்நுகர்வோர்கள் தடையில்லா மின்சாரம் பெற்று பயன் அடைவார்கள் என்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், இளம்பரிதி, மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, பிரேம்நாத், சவுந்திரபாண்டியன், உதவி பொறியாளர்கள் சந்திரன், கார்த்தி, சிறப்பு நிலை முகவர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன், சசிக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், உமாசங்கர், கடலரசன் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து இருப்பதால் கொண்டிசெட்டிப்பட்டி, மாருதிநகர் பகுதி மின்நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.