மாநகராட்சி பூங்கா பராமரிப்பு டெண்டர் விடுவதில் புதிய நடைமுறை; மன்ற கூட்டத்தில் மேயர் தகவல்


மாநகராட்சி பூங்கா பராமரிப்பு டெண்டர் விடுவதில் புதிய நடைமுறை; மன்ற கூட்டத்தில் மேயர் தகவல்
x

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடுவதில் புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் ஆர்.பிரியா பதில் அளித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

ராஜன் (மண்டல குழு தலைவர்):- ஆன்லைன் மூலமாக தெரிவிக்கப்படும் புகார்களில் நிறையே முறைகேடுகள் நடக்கிறது. புகார் தெரிவிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட ஆட்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். எனவே, இதுபோன்று ஆன்லைனில் புகார் தெரிவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

138-வது வார்டு கவுன்சிலர் கண்ணன் (தி.மு.க.) :- ஒரு வருடமாக மாநகராட்சி பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. ஏற்கனவே, பூங்காக்கள் பராமரிக்க டெண்டர் எடுத்த நபர் தான் தற்போது கழிவறைகளை பராமரிக்க டெண்டர் எடுத்துள்ளார். ஏற்கனவே, தன்னுடைய பணியை சரிவர செய்யாத ஒருவருக்கு மீண்டும் எப்படி டெண்டர் கொடுக்கிறீர்கள்?. இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்.

புதிய நடைமுறை

பாலவாக்கம் விஸ்வநாதன் (கல்வி குழு தலைவர்):- ஒரு தனி நிறுவனத்தால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கடந்த மன்ற கூட்டத்திலேயே சுட்டிக்காட்டினேன். நீச்சல் குளத்தை சரிவர பராமரிக்காததால் 7 வயது சிறுவன் இறந்துள்ளான். ஆனால், இன்று வரை அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

மேயர் ஆர்.பிரியா:- சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளோம். அவருக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படும். பூங்கா பராமரிப்பு பணிகளை பேக்கேஜ் அடிப்படையில் அதாவது புதிய நடைமுறையை பின்பற்றி டெண்டர் விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஒரு பேக்கேஜ் டெண்டர் எடுத்த நபர் மற்றொரு டெண்டரை எடுக்க முடியாது. இதன்படி, ஒரு ஒப்பந்ததாரருக்கு 8 முதல் 10 பூங்காக்களை மட்டுமே பராமரிக்கும் நிலை வரும். புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரரிடம் இருந்து பூங்கா பராமரிப்பு பணிகள் மற்றொரு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும்.

மாதம் தோறும் ஆய்வு

துணை மேயர் மகேஷ் குமார்:- புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரருக்கு இனிமேலும் ஒப்பந்தம் வழங்கக்கூடாது என்பதே உறுப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.

கமிஷனர் ககன்தீப் சிங் பேடி:- புதிய விதிமுறைகளின்படி ஒரு ஒப்பந்ததாரருக்கு குறிப்பிட்ட டெண்டர் மட்டுமே வழங்கப்படும். இதேபோல, அவருக்கு வழங்கப்படும் தொகையும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இருக்கும். மாதம் தோறும் ஆய்வு செய்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் சிறிது, சிறிதாகவே பணம் ஒதுக்க உள்ளோம். பூங்காக்களை மேம்படுத்தவே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.


Next Story