நச்சாந்துப்பட்டியில் புதிய ரேஷன் கடை
நச்சாந்துப்பட்டியில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
திருமயம் அருகே நச்சாந்துப்பட்டியில் 2-வது பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து பேசுகையில், இந்த பகுதிநேர ரேஷன் கடைகள் திறந்து வைப்பதன் மூலம் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றம் உள்ள காலங்களிலும், பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான உணவு பொருட்களை தங்களது கிராமத்திலேயே பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை தொடர்ந்து திருமயம் ஒன்றியம், நச்சாந்துப்பட்டியில் தகுதியுடைய 26 நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் புவியரசன், திருமயம் ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம், கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் பாலாஜி குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 160 குடும்ப அட்டைகளுடன் உள்ள இந்த ரேஷன் கடையில் பிரதி வாரம் புதன்கிழமை மட்டும் இயங்கும் வகையில் நச்சாந்துப்பட்டி கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.