சிப்காட்டில் ரூ.2 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு
சிப்காட்டில் ரூ.2 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு; அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் புதிய சேமிப்புக் கிடங்கு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் 59 இடங்களில் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. தற்போது ராணிப்பேட்டை சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு 1,850 ச.மீ. பரப்பளவில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இக்கிடங்கு ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், மண்டல மேலாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் ராஜேந்திரன், கிடங்கு மேலாளர் ஸ்ரீனிவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு மேஜை, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் காந்தி தனது துணைவியார் கமலா காந்தியுடன் கலந்து கொண்டு தன்னுடைய சொந்த நிதியில் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் 50 மேஜை மற்றும் நாற்காலிகளை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளியிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் ஜி.கே. உலக பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ்காந்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் அமைச்சர் காந்தியின் குடும்ப உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.