தும்பூர் அரசு பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும்
தும்பூர் அரசு பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்ட கோரி மாணவர்கள் கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோத்தகிரி,
தும்பூர் அரசு பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்ட கோரி மாணவர்கள் கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஜமாபந்தி தொடங்கியது
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். கீழ் கோத்தகிரி குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 22 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
தும்பூர் அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன், பள்ளி வளாகத்தில் புதிய கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட தும்பூர் அரசு தொடக்க பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 75 பேர் படித்து வருகின்றனர்.
புதிய கழிப்பிடம்
மாணவர்கள் பயன்படுத்துவதற்காக பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் பராமரிப்பின்றி, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கழிப்பிடம் தொலைவில் உள்ளதால், மழைக்காலங்களில் இயற்கை உபாைதகளை கழிக்க சேற்றில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
எனவே, பள்ளிக்கு அருகில் புதிய கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முகாமில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார்கள் மகேஸ்வரி, சுமதி, சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஜமாபந்தி நடக்கிறது.
கூடலூர்
கூடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் சித்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஓவேலி பேரூராட்சி அலுவலர் ஹரிதாஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் கூடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் காலை 7 மணிக்கு இயக்கப்படுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, மாணவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் இயக்க வேண்டும். தொடர்ந்து பட்டா, மின்சார வசதி இல்லாமல் 250 குடும்பங்கள் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் மனு அளித்தனர்.