புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு


புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு
x

புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை


புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது 'பிஎப்.7' எனப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா மக்களை ஆட்டிப்படைக்கிறது. சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கும் இந்த வகை கொரோனா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்படி மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மதுரை விமான நிலையத்தில் செய்யப்படுகிறது. இதுபோல், கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையம்

இந்தநிலையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக, நேற்று முதல் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. மேலும் அங்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோல், அவர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதமும் பெறப்படுகிறது. மேலும், விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளில் சிலர், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்களின் வசதிக்காக, விமான நிலைய வெளி வளாக பகுதியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனர்.


Next Story