புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தொடங்கியது-கண்காணிப்பு தீவிரம்
புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
புதிய வகை கொரோனா
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. எனவே இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலைய வளாகத்தில் நேற்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பணிகளை மதுரை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
புதிய வகை கொரோனா பரவல் அச்சம் காரணமாக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் பரிசோதனைகள் நடைபெறுகிறது. இன்று (அதாவது நேற்று) துபாயில் இருந்து வந்த பயணிகள் 4 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது. மேலும் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும்கொேரானா ஒப்புதல் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு, அவர்களின் முகவரி மற்றும் காய்ச்சல், சளி ஆகியவை குறித்து தகவல் பெறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
பரிசோதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியானால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
விமான நிலையத்திற்கு வருபவர்களில், 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை. 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா தடுப்பூசி 2 தவணை கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும், இல்லை என்றால் கொரோனா இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுப்பாடுகள்
இந்த ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் கிருஷ்ணன், ஜெயகுமார், சுரேஷ்குமார், கேசவன், சிவ பிரசன்னா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கொரோனா பரிசோதனைக்காக விமான நிலையத்தில் சுகாதார பணியாளர்களும், ஆய்வக பணியாளர்களும் பணியில் இருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்க வேண்டும் என, விமான நிலைய அதிகாரிகள், தனியார் விமான நிலைய அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.