13 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனம்
நாமக்கல் மாவட்டத்தில் 13 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனத்தை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாட்டில உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.25 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 200 வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை கடந்த 10-ந் தேதி முதல்-அமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களின் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு ஏற்கனவே இருந்த வாகனத்திற்கு பதிலாக ரூ.1.59 கோடியில் வாங்கப்பட்ட புதிதாக 13 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கலந்து கொண்டு, வாகனங்களின் சாவியை ஒன்றியக்குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினர். இதில் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேலு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.