புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்: கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி


தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி அறிவுறுத்தி உள்ளார்.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக தமிழக நில நிர்வாக கூடுதல் ஆணையர் ஜெயந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது அதற்கு முன்பாக நல்ல முறையில் வாக்காளர் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியாகும் வகையில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பேசும் போது, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே இடத்தில் 13 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை பிரித்து அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சிறப்பாக..

கூட்டத்தில் தமிழக நில நிர்வாக கூடுதல் ஆணையரும், தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரியுமான ஜெயந்தி பேசும் போது, அரசியல் கட்சியினர் கலெக்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தீர்கள். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அனைவரும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர்கள் கவுரவ்குமார், மகாலட்சுமி, புகாரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் தாசில்தார்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story