மலைப்பாதையில் தோன்றிய புதிய நீர்வீழ்ச்சிகள்
தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் தோன்றிய புதிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை நிரம்பியது. மேலும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவே அமைந்து உள்ளது. தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மரப்பாலம் அருகே மலை உச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த பகுதியில் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிப்பதோடு, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது. மரப்பாலம் பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் இறங்கி விளையாடுகின்றனர்.