குமரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய இணையதள சேவை; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய இணையதள சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நாகா்கோவில்,
குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய இணையதள சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இணையதள சேவை
குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "குமரி மாவட்டத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுலா தலங்கள்
அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், அருவிகள் மற்றும் பூங்காக்கள், இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், அரிய வகை மூலிகைகள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய Kumaritourism.com என்ற புதிய இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன், இணையதளத்தினை உருவாக்கிய கேப்காம் சொலியூசன்ஸ் நிறுவனர் அன்பு ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.