குறு, சிறு, நடுத்தர தொழில்களின் உற்பத்தியை பெருக்க புதிய வலைதளம்
குறு, சிறு, நடுத்தர தொழில்களின் உற்பத்தியை பெருக்க ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வலைதளத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை,
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கருத்துகளை பரிமாறவும், பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணவும், முதல்-அமைச்சரின் '2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம்' என்ற இலக்கை அடையவும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வளர் 4.0 என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளது.
இந்த வலைதளத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களின் விவரங்கள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.
சிக்கல்களுக்கு தீர்வு
தொழில்துறையினர், சேவை வழங்குனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்பு தேவைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகளையும், தீர்வுகளையும் வழங்க இந்த வலைதளம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். 29 நகரங்களில் இருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் இந்த வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
இந்த புதிய வலைதளத்தை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், மின்னாளுமை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன் ஆகியோர் நேரடியாகவும், இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குனர் காமகோடி காணொலி காட்சி மூலமாகவும் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.