புதிய வாராந்திர சிறப்பு ரெயிலை விரைவில் இயக்க நடவடிக்கை
புதிய வாராந்திர சிறப்பு ரெயிலை விரைவில் இயக்க நடவடிக்கை
வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயிலை இயக்க விரைவில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்மிக சுற்றுலா தளம்
நாகை மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்டவை அமைந்த மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது. இதனால் நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். பெங்களூரு மார்க்கமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர்.
பெங்களூரு- வேளாங்கண்ணிக்கு புதிய ரெயில்
இதனால் பெங்களூரு- வேளாங்கண்ணிக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் என ரெயில்வேக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து கடந்த 11.2.2023 முதல் வருகிற 29.4.2023 வரை சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தென்மேற்கு ரெயில்வே ஈடுபட்டு வந்தது.
அதன்படி சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து, அன்று இரவு 11 மணியளவில் அதே மார்க்கத்தில் இயக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் பெங்களூருவை சென்றடையும் படி இயக்க உத்தேசிக்கப்பட்டது.
விரைந்து இயக்க நடவடிக்கை
ஆனாலும் தற்போது வரை வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவில்லை. எனவே வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தென்மேற்கு ெரயில்வே கடந்த 11- ந்தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 29-ந் தேதி வரை வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயிலை இயக்க முடிவு செய்து தென்னக ெரயில்வேயிடம் அனுமதி கேட்டுள்ளது.
ஆனால் தடையில்லா சான்று தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டம் வழங்காததால் தான் இந்த ரெயிலை தென்மேற்கு ெரயில்வே இயக்க காலதாமதம் செய்வதாக தெரிகிறது. எனவே வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருவழி ரெயில் போக்குவரத்து
தென்னக ரெயில்வே தஞ்சை - நாகை - காரைக்கால் மார்க்கத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், பயணிகள் ரெயிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரைக்கால்- தஞ்சை இடையே இருவழி ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் என இரு வழித்தடங்களில் இயக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு ரெயில்வே வாரியத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனர்.