கொளத்தூர் தொகுதியில் ரூ.5 கோடியே 47 லட்சம் மதிப்பிலான புதிய பணிகள்


கொளத்தூர் தொகுதியில் ரூ.5 கோடியே 47 லட்சம் மதிப்பிலான புதிய பணிகள்
x

ரூ.5 கோடியே 47 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரூ.20.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம், திரு.வி.க.நகர் 8-வது தெருவில் அமைந்துள்ள காலி மைதானத்தில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்கா, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜி.கே.எம். காலனி 34-வது தெரு, பள்ளி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பல்லவன் சாலை மற்றும் ஜெகநாதன் சாலை ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பல்நோக்கு மையங்கள் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், பல்லவன் சாலையில் 1100 மீட்டர் நீளத்துக்கு ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அகரத்தில் ரூ.27.94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்துவைத்தார். மேலும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜெகநாதன் தெருவில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையத்துக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜவகர்நகர் 2-வது பிரதான சாலையில் உள்ள நட்சத்திர விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மையம் மற்றும் ஜவகர்நகர் 1-வது வட்ட சாலையில் உள்ள பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஜவகர்நகரில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேஜைப் பந்தாட்டத்துக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம்

மேலும், ஜவகர்நகர் 2-வது பிரதான சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருமலைநகர் 1-வது தெரு பூங்கா, முகமது உசேன் காலனி பூங்கா, செந்தில்நகர் 13-வது தெரு மற்றும் சீனிவாசாநகர் 3-வது பிரதான சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார மையம் ஆகியவற்றை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, சக்திவேல்நகர் 2-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள பூங்காவில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் கழிப்பறை வசதி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திரு.வி.க.நகர் 18-வது தெருவில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் வெளிப்புற சுற்றுச்சுவர் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தீட்டித்தோட்டம் குறுக்கு தெருக்களில் பேவர் கற்களைக் கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி.

ஜவகர்நகர் 5-வது பிரதான சாலை பூங்கா, பெரியார்நகர் 20-வது தெரு பூங்கா மற்றும் ராம்நகர் 2-வது பிரதான சாலை விளையாட்டுத்திடல் ஆகியவற்றில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணிகள்; ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கோபால் காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் புதிதாக திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணி, ஜி.கே.எம். காலனி 15-வது தெருவில் பேவர் கற்களைக் கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் லோகோ ஒர்க்ஸ் சாலையில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுத்திடலில் புதிதாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி அமைக்கும் பணிகள்.

தையல் எந்திரங்கள்

கபிலர் தெரு, திக்காகுளம் தெரு, வசந்தா தோட்டம் மதுரை தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்களில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, திக்காகுளம் பகுதியில் வெளிப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்தமாக ரூ.5 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து, பெரியார்நகரில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள், தையல் எந்திரங்கள் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., தாயகம் கவி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story