புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரை


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரை
x

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது இடங்கள், சாலையில் இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது இடங்கள், சாலையில் இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பொதுஇடங்களில் கூடுவதை தவிருங்கள்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணியை தாண்டியதும் தொடங்கிவிடும். இந்த புத்தாண்டை மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

புத்தாண்டை கொண்டாடுவதற்கு இன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாகனம் பறிமுதல்

மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படும். மது குடித்து விட்டு யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனைத்து முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம், கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகனங்கள், கார்களில் வேகமாக சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டை அசம்பாவிதம், விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடி, போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story