சேலத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு-ஈரடுக்கு மேம்பாலம் அடைப்பு
சேலம் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஈரடுக்கு மேம்பாலம் அடைக்கப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டம்
சீனாவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என்றும், பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
போலீசார் கண்காணிப்பு
சேலம் மாநகரில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா விதித்திருந்தார். இதையொட்டி மாநகர் முழுவதும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்தனர்.
அதாவது, நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஜங்ஷன் ரெயில் நிலையம், ஏ.வி.ஆர். ரவுண்டானா, 5 ரோடு, புதிய பஸ்நிலையம் பகுதியில் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் விடிய, விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இடையூறு
அப்போது நடுரோட்டில் யாரேனும் கேக்வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்களா? எனவும், மது அருந்திவிட்டு சாலையில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுகிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், துணை கமிஷனர் லாவண்யா தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பழைய பஸ்நிலையம், திருச்சி மெயின்ரோடு, அம்மாப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகள் மீது வழக்கு
இதனிடையே, மாநகரில் தடையை மீறி சாலையில் அதிவேகமாக 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் மீதும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.