தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
சிறப்பு திருப்பலி
புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும் ஆலய பங்கு தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணைப்பங்குத் தந்தை சகாய ஜான்பிரிட்டோ அடிகளார் ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு இறைவன் செய்த நன்மைக்காக நன்றி வழிபாடுகளும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விருதுநகர் நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையிலும், விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் சென்னை ஜஸ்டின் அடிகளார், பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார் ஆகியோர் தலைமையிலும் நன்றி வழிபாடுகள், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.
மறையுரை
ஆர்.ஆர்.நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர்ராய் அடிகளார், துணை பங்குத்தந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் புனித ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை போதகர் மிக்கேல்ராஜ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையிலும் புத்தாண்டு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் எடிசன் அடிகளார் தலைமையிலும், காரியாபட்டி தூய அமல அன்னை ஆலயத்தில் பாப்புராஜ் அடிகளார் தலைமையிலும், சிவகாசி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையிலும், திருத்தங்கல் புனித அந்தோணியார் ஆலயத்தில் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் அடிகளார் தலைமையிலும், மீனம்பட்டி புனித அன்னை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை பால்ராஜ் அடிகளார் தலைமையிலும் நன்றி வழிபாடுகள், புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது.
வரவேற்பு பாடல்
புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் புத்தாடை அணிந்து திரளான பேர் கலந்து கொண்டனர். தேவாலய பாடல் குழுவினர்கள் புத்தாண்டை வரவேற்று பாடல்களை பாடினர்.
திருப்பலியின் முடிவில் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை இருகரம் கூப்பி ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், வண்ண மின் விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.