புதிதாக போடப்பட்ட சாலை ஒரேநாளில் சேதம்
செய்துங்கநல்லூர் அருகே புதிதாக போடப்பட்ட சாலை ஒரேநாளில் சேதம் அடைந்துள்ளது.
ஸ்ரீீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே புதிதாக போடப்பட்ட சாலை ஒரேநாளில் சேதமானதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக சாலையை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை அமைக்கும் பணி
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலையில் கருங்குளத்தில் இருந்து தெற்கு காரசேரி காட்டுப்பகுதி வரை கடந்த வருடம் சாலை சீரமைக்கப்பட்டது. அதே போல் சேரகுளத்தில் இருந்து வள்ளுவர் காலனி வரையும் சீரமைக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையில் உள்ள 5 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
ரூ.2.13 கோடியில்...
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி இந்த சாலையை புதுப்பிப்பிதற்கான பணிகள் ரூ.2.13 கோடி மதிப்பில் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாட்களில் இருந்தே பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கு காரசேரி காட்டுப்பகுதியில் இருந்து வள்ளுவர்காலனி வரை சாலைப்பணி நடந்து வருகிறது.
ஒரேநாளில் சேதம்
இந்த நிலையில் நேற்று காலையில் வள்ளுவர் காலனி பகுதியில் போடப்பட்டிருந்த சாலையில் மாலையில் சென்ற லாரி பக்கவாட்டில் இறங்கியதில் சாலை சேதமானது. மேலும் அந்த பகுதி சாலை முழுவதும் ஒருநாள் மழை பெய்தால் கூட பெயர்ந்து சேதமடையும் நிலையில் இருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.