காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திருமணமான 4-வது நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாமனார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திருமணமான 4-வது நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாமனார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வீரபுரம் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு(வயது 52). இவர், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் முத்தரசு(24). இவரும் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.முத்தரசும், நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகிபுரத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன்(54) மகள் அரவிந்தியாவும்(25) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
காதலிக்கு கத்திக்குத்து
அரவிந்தியா பி.ஏ. பட்ட படிப்பு முடித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்தியா, முத்தரசுவுடன் பேசுவதை நிறுத்தினார். மேலும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த முத்தரசு, தனது காதலி அரவிந்தியாவிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தனியாக ஒரு இடத்துக்கு வருமாறு கூறினார். இதை நம்பிய அரவிந்தியா, தனது காதலன் முத்தரசு கூறிய இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு அரவிந்தியாவை கத்தியால் முத்தரசு குத்தினார்.
ஜாமீனில் வந்தார்
இதில் படுகாயம் அடைந்த அரவிந்தியா திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தரசுவை கைது செய்தனர். இதன் பின்னர் அவா் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
திருமணம்
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த முத்தரசுக்கும், அரவிந்தியாவுக்கும் இடையே மீண்டும் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் இரு குடும்பத்தினரும் சமாதானமாக பேசி முத்தரசுக்கும் அரவிந்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.இதன்படி இவர்களது திருமணம் கடந்த 13-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் இரவு அரவிந்தியா வீட்டில் புதுமண தம்பதியினர் தங்கி இருந்தனர். அவர்களுக்கு நேற்று கறி விருந்து நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தட, புடலாக நடந்து வந்தது. இந்த நிலையில் நற்று முன்தினம் இரவு புதுமாப்பிள்ளை முத்தரசுக்கும், அவரது மாமனார் ரவிச்சந்திரனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகே இருந்த அரிவாளை எடுத்து தனது மருமகன் முத்தரசுவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முத்தரசு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் முத்தரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பகுதியில் பதுங்கி இருந்த ரவிச்சந்திரனையும் இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்ததாக அவருடைய உறவினர் முத்து வேல்( 52) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருமணம் முடிந்த 4 நாட்களில் புதுமாப்பிள்ளையை அவரது மாமனாரே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.