புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; பயத்தில் கணவரும் விஷம் குடித்து சாவு


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை;  பயத்தில் கணவரும் விஷம் குடித்து சாவு
x

ஆழ்வார்குறிச்சி அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் அவரது கணவரும் விஷம் குடித்து இறந்தார்.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் அவரது கணவரும் விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுமண தம்பதி

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள தாட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் மரிய மிக்கேல் (வயது 29). இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த பேபி ஜான்சிராணி (25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தகராறு

தாட்டான்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலய விழா நடந்தது. அப்போது, மரிய மிக்கேல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி பேபி ஜான்சிராணி கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் மரிய மிக்கேல் கடைக்கு சென்று இறைச்சி வாங்கி விட்டு, மது அருந்தி வந்ததாக தெரிகிறது. அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மரிய மிக்கேல், பேபி ஜான்சிராணியை தாக்கியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த பேபி ஜான்சிராணி வீட்டில் உள்ள அறையில் கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பேபி ஜான்சிராணி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே, சம்பவம் நடந்தபோது வீட்டில் இருந்து மரிய மிக்கேல் வெளியேறி தலைமறைவானார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். மேலும், இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவரும் சாவு

இந்த நிலையில் அம்பை அருகே காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு அருகில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அம்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்தவர் மரிய மிக்கேல் என்பதும், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் தன்னை போலீசார் பிடித்து விடுவார்களா? என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

பரிதாபம்

கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அம்பை, ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் கெங்காதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

ஆழ்வார்குறிச்சி அருகே குடும்ப தகராறில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story