தொடர் மழை எதிரொலி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1,066 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க கூடும்.

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கிருஷ்ணகிரி அணை- 60.20, போச்சம்பள்ளி-36.20, கிருஷ்ணகிரி-26, பர்கூர்-14.20, நெடுங்கல்-7, ராயக்கோட்டை-5, தேன்கனிக்கோட்டை-5


Next Story