ரெயில்வேக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அஞ்சல்துறை -திருநாவுக்கரசர் எம்.பி. பேச்சு
ரெயில்வேக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அஞ்சல்துறை உள்ளது என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
திருச்சியில் நேற்று அஞ்சல் சேவைத்திறன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அஞ்சல் மண்டல தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி.சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது,
நாட்டிலேயே ரெயில்வே துறைக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அஞ்சல்துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரெயில்வேயில் பணியாற்றுபவர்களைப் போல அஞ்சல்துறையில் பணியாற்றுபவர்களும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ளனர். இரு துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் நாள்தோறும் மக்கள் சேவையாற்றுகின்றனர். எனவே மக்கள் இருக்கும் வரை அஞ்சல்துறையும் செயல்படும். ஆனால் தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தந்தி எனப்படுகின்ற அற்புதமான சேவை இன்று இல்லை. இது வருத்தமாகத்தான் உள்ளது.
ஆனால் அதையெல்லாம் விட தற்போது 150 வருட பாரம்பரியமான இந்திய அஞ்சல்துறை பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. 1 லட்சத்து 55 ஆயிரம் அஞ்சலகங்களை உள்ளடக்கிய இத்துறையின் ஒரு அங்கமாக 3 ஆயிரத்து 500 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்டு திருச்சி மத்திய மண்டலம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
மேலும், அனைத்து மக்களுக்கான சிறு சேமிப்பு திட்டம், எளிய மக்களும் விரும்பும் தொடர் வைப்பு கணக்கு, பெண் குழந்தைகளுக்கென்றே செல்வமகள் சேமிப்பு, 60 வயதைக் கடந்தோருக்கு முதியோர் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம், சேமிப்பு பத்திரம், காப்பீட்டு திட்டங்கள் போன்ற பல சேவைகளை அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக அஞ்சல்துறை பணியாற்றி வருகிறது.
இவை தவிர பார்சல் சேவைகள், ஆதார் சேவைகள், தங்க பத்திர திட்டம், கடவுச்சீட்டு சேவை, பொது சேவை மையம் ஆகிய சேவைகளையும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.
பின்னர் அஞ்சல்துறையில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரெக்ஸ், அஞ்சல்துறை அலுவலா்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.