நெய்வேலி வன்முறை: சம்பவ இடத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு
என்.எல்.சி. நுழைவு வாயிலில் வன்முறை நடந்த இடத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர்.
போலீசார் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கலவரத்தை கலைத்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் என்.எல்.சி. நுழைவு வாயிலில் வன்முறை நடந்த இடத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்து வருகிறார். வன்முறையில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்கிறார்.
போராட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது