டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 மணி நேரம் சோதனை
மயிலாடுதுறை அருகே டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 மணிநேரம் சோதனை நடத்தினர்.
பொறையாறு:
மயிலாடுதுறை அருகே டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 மணிநேரம் சோதனை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிரைவர் வீட்டில் சோதனை
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வடகரை சின்னமேல தெருவை சேர்ந்த முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இவர் தனது தந்தையுடன் மஸ்கட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது 2 பேரும் அங்கு உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் அவருடைய வீட்டுக்கு வந்தனர். அதிகாரிகள், முகமதுபைசல் குடும்பத்தினர் மற்றும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காலை 8.20 மணி அளவில் அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது முகமது பைசல் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையையொட்டி செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேமராவை பறிக்க முயற்சி
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தது தொடர்பாக ெசய்தி சேகரிக்க சென்ற நிருபர்களிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கேமராவை பறிக்க முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.